மத்திய அரசின் கைப்பாவை டெல்லி காவல்துறை - தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடும் கண்டனம்

" alt="" aria-hidden="true" />


மத்திய அரசின் கைப்பாவையாக டெல்லி காவல்துறை மாறியுள்ளது என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கூறி உள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:



டெல்லியின் வடகிழக்கு பகுதியில் கலவரம் வெடித்ததும் வன்முறையை ஒடுக்கவும் கலவரக்காரர்களை கைது செய்யக்கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மனுவின் அவசரம் கருதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நீதிபதி முரளிதர் வீட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து நீதிபதி போலீசாருக்கு சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். நேற்று முன்தினம் மீண்டும் அந்த வழக்கு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது கலவரத்தை தூண்டும் வகையில் சிலர் வெறுப்புணர்வுடன் பேசியதாக குற்றச்சாட்டுகள் மனுதாரர்கள் சார்பில் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி முரளிதர் அதற்கான ஆதாரத்தை கேட்டார். அதன்பேரில் பாஜக தலைவர்கள் சிலரது பேச்சு அவர்கள் டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் வெளியிட்ட தகவல்கள் ஆகியவை நீதிமன்றத்தில் வீடியோ ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து அதனை பரிசிலனை செய்த நீதிபதி முரளிதர் பாஜக தலைவர்கள் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா,அபய் வர்மா, பர்வேஸ்சர்மா ஆகிய 4 பேர் மீதும் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதற்கு ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அவர்கள் 4 பேர் மீது உடனடியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் நீதிபதி முரளிதர் மத்திய அரசு டெல்லி மாநில அரசு மற்றும் டெல்லி போலீசார் ஆகியோரை மிக கடுமையாக விமர்சித்தார். அதில் “நாட்டில் 1984ம் ஆண்டு நடந்தது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடக்க நாங்கள் அனுமதிக்க முடியாது. மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என கண்டிப்புடன் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு வியாழக்கிழமைக்கு (நேற்று) ஒத்திவைக்கப்பட்டது. 
இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் உடனடியாக அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதி முரளிதர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். நீதிமன்ற பணிகளை விடுத்து உடனடியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக இடமாற்றம் செய்யப்படும் நீதிபதிகளுக்கு புதிய இடப்பணியை ஏற்க சுமார் 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் காரணமாக நீதிபதி அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பாஜக தலைவர்கள் மீது தற்போது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தால் அதனால் எந்த வித பயனும் இல்லை என டெல்லி நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து மத்திய அரசின் உத்தரவின் பேரில் கைப்பாவையாக டெல்லி காவல்துறை செயல்படுவதை தெளிவாக்கியுள்ளது.
டெல்லி வன்முறை தொடர்பாக ஐநா மனித உரிமை ஆணையம் தனது கவலையை தெரிவித்துள்ளது. வன்முறையை டெல்லி காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்த சம்பவம் மன வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியா போன்ற பன்முக தன்மை கொண்ட நாட்டில் ஜனநாயகத்தை காலில் போட்டு நசுக்கும் செயலில் மத்திய ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளது வன்மையாக கண்டிக்கதக்கது என கூறி உள்ளார்